பாஸ்போர்ட்டை இழந்து மலேசியாவில் தவிக்கும் இந்திய குடும்பத்திற்கு சுஷ்மா சுவராஜ் உதவி
புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த மீரா ரமேஷ் படேல் என்பவரது குடும்பத்தினர் மலேசியாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர். அங்கு பாஸ்போர்ட்டை தொலைத்ததால் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். இதையடுத்து மீரா ரமேஷ் படேல் டிவிட்டர் பதிவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், `‘மலேசியா விமான நிலையத்தில் எனது குடும்பத்தினர் பாஸ்போர்ட்டை இழந்து தவிக்கின்றனர். வார விடுமுறை தினம் என்பதால் மலேசிய தூதரகம் மூடிக்கிடக்கிறது. எனவே எங்கள் குடும்பத்தினர் இந்தியா திரும்ப தாங்கள் உதவி செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருந்தார். அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு சுஷ்மா வெளியிட்ட உத்தரவில், ‘‘மிக அவசரமான பிரச்னை என்பதால் உடனடியாக தூதரகத்தை திறந்து மீரா ரமேஷ் படேல் குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும்’’ கூறியிருந்தார். இதையடுத்து அவர்களை தொடர்புக் கொண்டு அவர்களது பிரச்னையை தீர்த்து வைத்துள்ளதாக இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.இதேபோல் அமெரிக் காவில் படித்து வரும் இந்திய மாணவி அனுஷா துலிபாலா தனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். தற்போது தேர்வு நேரம் என்பதால் இந்தியா சென்று பாஸ்போர்ட் பெறமுடியாது நிலை உள்ளது. இதனால் தனக்கு பாஸ்போர்ட் பெற உதவி செய்யுமாறு டிவிட்டரில் அமைச்சர் சுஷ்மாவுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட சுஷ்மா சுவராஜ், அனுஷாவுக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டுள்ளார்.