விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ரவிசங்கர் பிரசாத் தகவல்
டெல்லி: விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாதத்தின் நான்காவது சனிக்கிழமை, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து விடுமுறைகள் வந்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இதனைக் கண்டித்து ஒன்பது வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பினர் கடந்த 21-ம் தேதி வெள்ளிகிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த நாள் சனிக்கிழமை 4வது சனிக்கிழமை விடுமுறை, மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) என தொடர்ந்து 3 நாட்கள் வங்கி செயல்படாத நிலை ஏற்பட்டது. 24ம் தேதி(திங்கட்கிழமை) வங்கி பணி நாளாகும். 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. 26ம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனால் அன்றைய தினமும் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டது. ஸ்டிரைக், விடுமுறை என்று அடுத்தடுத்து 5 நாட்கள் விடுமுறையால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியது. வங்கிகள் தொடர் போராட்டம் காரணமாக வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள் போன்றவை கடுமையாக பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியது. இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இந்த இணைப்பின் மூலம் இவ்வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வரிசையில் பரோடா வங்கியை மூன்றாவது இடத்தில் முன்னிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் வங்கித்துறையில், மூன்று வங்கிகளை இணைத்துள்ளது இதுதான் முதல் முறையாகும். மூன்று வங்கிகள் இணைப்பு மூலம், நாட்டின் 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுத்துள்ளது. இந்த வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.