25. புது வாழ்வுக்கு முதுமக்கள் தாழி

  தினத்தந்தி
25. புது வாழ்வுக்கு முதுமக்கள் தாழி

டவுள் உருவ வழிபாடு என்பது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது தான்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களாகக் கருதப்பட்ட இயற்கையை வணங்கினார்கள்.

அத்தோடு தாய் தெய்வ வழிபாடு, இறந்த மூதாதையர்களின் வழிபாடு ஆகியவையும் வழக்கில் இருந்தன.

இவற்றில், இறந்த மூத்தோர் வழிபாட்டுக்கான ஆதாரங்களே இப்போது தொல்பொருள் ஆய்வுகள் மூலம் ‘முதுமக்கள் தாழி’ என்ற வடிவில் வெளி உலகுக்குத் தெரியவந்து இருக்கின்றன.

தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்போதும்கூட ஆங்காங்கே வீடு கட்ட பள்ளம் தோண்டும்போதோ அல்லது கிணறுக்காக ஆழமான குழி தோண்டும்போதோ முதுமக்கள் தாழிகள் எடுக்கப்படுகின்றன.

பழங்காலத்தில், மரணம் என்பது மறுவாழ்வுக்கான தொடக்கம் – அதாவது, ‘உயிர் இழந்தவர்கள் மீண்டும் மறுவாழ்வு பெறுவார்கள்’ என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

எனவே, இறந்தவர்களின் உடலை அவர்கள் தீயிட்டு எரிப்பது இல்லை.

மாறாக, அந்த உடலை பெரிய பானையில் வைத்து, அதனுடன் அவர்களது மறு வாழ்வுக்குத் தேவையான சில பொருட்களையும் சேர்த்து அடக்கம் செய்தார்கள்.

மனிதன் கர்ப்பப்பை மூலம் பிறப்பு எடுப்பதால், இறந்தவர்களின் மறுவாழ்வுக்காக கர்ப்பப்பை வடிவிலான தாழியில் அவர்களது உடலை வைத்து பூமிக்குள் புதைத்தார்கள்.

பழங்கால மனிதர்களின் இந்தப்பழக்கம், ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகள் மூலம் மிகத்தெளிவாகத் தெரியவருகின்றது.

‘ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகள்’ என்று சென்னை அருங்காட்சியகத்தில் பல தாழிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு தாழியின் மேல்புறம் தொப்புள் கொடி போல உருவம் இருப்பதைக் காணலாம்.

அதாவது, அந்த தாழியை, கர்ப்பப்பை என்று அடையாளமிட்டு, இறந்த ஒருவர் மறுவாழ்வு பெற வேண்டும் என்ற நோக்கில் அவரது உடலை அதில் வைத்து அடக்கம் செய்து இருப்பது தெரியவருகிறது.

பொதுவாக குடியிருப்புகளுக்கு வெளியே, மரணக்கடவுளின் திசையான தென்திசையில் தான் பெரும்பாலான முதுமக்கள் தாழிகளை புதைப்பது வழக்கமாக இருந்தது.



ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்திய ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியாவை ஆச்சரியப்படுத்தியவைகளுள் ஒன்று, அங்கே முதுமக்கள் தாழிகளை புதைப்பதற்கான இடத்தை அந்தக்கால மக்கள் தேர்ந்து எடுத்து இருந்த முறை தான்.

செழிப்பு மிக்க தாமிரபரணி ஆற்றங்கரையான அந்தப்பகுதியில் கரடுமுரடான கற்கள் நிறைந்த, பயிர் சாகுபடிக்கு உபயோகம் இல்லாத, ஆற்றின் வெள்ளம் வந்தாலும் பாதிக்காத மேட்டுப்பகுதியை மக்கள் தேர்ந்து எடுத்து ஈமச்சடங்கு செய்யும் இடமாக அதனை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எண்ணம் உள்ளவர்களால் தான் இவ்வாறான இடத்தைத் தேர்ந்து எடுத்து இருக்க முடியும் என்பது அலெக்சாண்டர் ரியாவின் கருத்து.

தொல்பொருள் ஆய்வு மூலம் கிடைக்கும் தாழிகள் அனைத்துமே ‘முதுமக்கள் தாழி’ என்று அடையாளப்படுத்தப்பட்டாலும், அதற்கு வேறு பல பெயர்களும் இருக்கின்றன.

முதுமக்கள் தாழி என்பது பேச்சு வழக்கில் திரிந்து, ‘மதமத்தன் தாழி’ என்றும் சில இடங்களில் கூறப்படுகிறது.

‘பிணஞ்சுடு சாம்பற் சாடி’, ‘மதமக்கா பானை’, ‘ஈமத்தாழி’, ‘ஈமப்பேழை’, ‘முசுமுசுங்கை சால்’, ‘குடுவை’, ‘மண் சவப்பெட்டி’ கலம், கவிசெந்தாழி, மன்னர் மறைத்த தாழி என்று பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது.

கூர்முனைத்தாழி, கால்களை உடைய தாழி, விலங்கு உருவத்தாழி ஆகியவையும் அப்போது பயன்பாட்டில் இருந்தன.

ஆதிச்சநல்லூரில் 4 அடி முதல் 11 அடி உயரம் வரை உள்ள முது மக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



சில தாழிகள் வாய்ப்பகுதி அகன்று காணப்படுகின்றன. சில தாழிகள், வாய்ப்பகுதி சிறுத்தும் உயரமாகவும் உள்ளன.

இறந்த ஒருவரது உடலை அப்படியே அமர்ந்த நிலையில் வைக்கும் வகையிலான தாழிகள் தான் பெரும்பாலும் கிடைத்து இருக்கின்றன.

அங்கே கிடைத்த அனைத்து தாழிகளும் மண்ணால் மிக நேர்த்தியாக செய்யப்பட்டவை. மண்ணில் தானே புதைக்கப் போகிறோம் என்ற அலட்சிய எண்ணத்துடன் அல்லாது அந்த தாழிகள் மிக அழகாக, வேலைப்பாடுடன் செய்யப்பட்டுள்ளன.

இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கிலேயே அவை இவ்வாறு சிறப்பாக செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஆதிச்சநல்லூர் தாழிகள் சிலவற்றில் எலும்புக் கூடுகள் மட்டும் இருக்கின்றன. மண்டை ஓடுகள் காணப்படவில்லை.

இறந்தவரின் உடலை, மிருகங்களுக்கு உணவாக்கிவிட்டு அதன் பிறகு அவர்களது எலும்புகளைச் சேகரித்து ஈமச்சடங்கு செய்து இருக்கலாம் என்று இதற்கு காரணம் கற்பிக்கப்படுகிறது.

குறை மாதத்தில் அல்லது சிறிய வயதிலேயே நோய் கண்டு இறந்த குழந்தைகளின் உடல்களும் தாழிகளில் புதைக்கப்பட்டன. அந்தத் தாழிகள் ‘தொட்டில் பேழைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.



ஒரு சில தாழிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் எலும்புக் கூடுகள் உள்ளன.

வயது முதிர்ந்த பிறகும் மரணத்தை சந்திக்காமல் படுக்கையிலேயே கிடக்கும் அதிக வயதானவர்களை அப்படியே தாழிக்குள் வைத்து கருணைக்கொலை செய்வது போல அடக்கம் செய்து இருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது.

உலகிலேயே ஆதிச்சநல்லூரில் தான் மிக அதிக அளவிலான தாழிகள் புதைக்கப்பட்டு இருப்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அங்கு ஆய்வு நடத்திய அலெக்சாண்டர் ரியா, ‘‘ஆதிச்சநல்லூர் இடுகாட்டில் கிடைத்த கூம்பு வடிவிலான தாழிகளின் உள்ளேயும் வெளியேயும் பல பொருட்கள் கிடைத்தன. இந்த தாழிகள் தோராயமாக 6 அடி இடைவெளியில் புதைக்கப்பட்டுள்ளன. தரையில் இருந்து மூன்றடி முதல் பன்னிரண்டு அடி ஆழம் வரை இந்த தாழிகள் காணப்படுகின்றன. சில தாழிகள் ஒன்றின் மீது ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளன. எங்களது கணக்குப்படி, 114 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில், ஏக்கருக்கு ஆயிரம் தாழிகள் வீதம் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட மயான பூமிகளிலேயே ஆதிச்ச நல்லூர் தான் மிக விரிவானதும், மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். மதராஸ் மாவட்டத்தில் வரலாற்று காலத்துக்கு முற்பட்டவை என்று நூற்றுக்கும் அதிகமான இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கெல்லாம் ஒன்று அல்லது இரண்டு என்ற அளவிலேயே முதுமக்கள் தாழிகள் இருக்கும். அவை எதுவுமே ஆதிச்சநல்லூருக்கு ஈடாகாது’’ என்று கூறி இருக்கிறார்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த அனைத்து தாழிகளுக்குள்ளும், அதன் அருகேயும் ஈமச்சடங்கு தொடர்பான பல வகையான பொருட்கள் கிடைத்தன.

அந்தப்பொருட்கள் தான் தமிழர்களின் பழங்கால நாகரிகத்திற்கு ஆதாரமாக இப்போது கொண்டாடப்படுகின்றன.

சில தாழிகளில் கிடைத்த தங்கம் மற்றும் இரும்பு பொருட்கள், உலகின் மற்ற பகுதி மக்களைவிட உலோக நாகரிகத்தில் தமிழர்களே முன்னேறி இருந்தார்கள் என்பதை படம்பிடித்துக் காட்டுகின்றன.

மேலும் சில தாழிகளில் இருந்த நெல், சாமை போன்ற உணவுப் பொருளின் எஞ்சிய பகுதிகள் மற்றும் உழவுக் கருவிகள், தமிழர்களின் விவசாய தொழில்திறனை பறைசாற்றுகின்றன.

அங்கே கிடைத்த ஆடைகளின் சில பகுதிகள், பருத்தி சாகுபடி மற்றும் நெசவு தொழிலில் தமிழர்களின் திறமையை எடுத்துக் கூறுகின்றன.

அதேபோல உலகையே ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு தாழிக்குள் எழுத்து வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது பற்றிய அதிசயமான தகவலை அடுத்த வாரம் பார்க்கலாம்.

(நாகரிகம் தொடரும்)

மூலக்கதை