இனி பேசுரதுக்கு எதுவுமே இல்ல! விராட் கோஹ்லி வருத்தம்

  PARIS TAMIL
இனி பேசுரதுக்கு எதுவுமே இல்ல! விராட் கோஹ்லி வருத்தம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான நேற்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி தோல்வியை சந்தித்துள்ளது.
 
ஐபிஎல் தொடரின் 20வது போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் கோலி அதிக பட்சமாக 41 (33) ரன்கள் எடுத்தார். அத்துடன் மொயின் அலி 32 (18), அக்‌ஷ்தீப் நாத் 19 (12) மற்றும் டி வில்லியர்ஸ் 17 (16) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். டெல்லி அணியில் மிரட்டலாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பிருத்வி ஷா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து விளையாடினர்.
 
பிருத்வி ஷா 28 (22) ரன்களில் அவுட் ஆகினார். ஆனால் ஸ்ரேயாஸ் நிலைத்து விளையாடி அரை சதமடித்து, பின்னர் 67 (50) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்து பெங்களூர் அணி மிரட்டியது. ஆனாலும் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி எளிதாக இலக்கை எட்டியது. இதனால் பெங்களூர் அணி 6 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்தது.
 
டெல்லி அணியுடனான இந்த தோல்வி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி பேசியதாவது;
 
160 ரன்கள் இலக்காக நிர்ணயித்தால போதும் என்று தான் நினைத்தோம், ஏறத்தாழ நாங்கள் நினைத்த இலக்கையும் நிர்ணயித்துவிட்டோம், ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சிற்கு சாதகமாக பிட்ச் அமையவில்லை. பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இன்றைய போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மையாகும், ஒவ்வொரு போட்டியிலும் தோல்வியடைந்துவிட்டு அது காரணம் தேடுவதும் அதனை பேசுவதும் முறையானது அல்ல. நாங்கள் சரியாக விளையாடவில்லை அதுவே தோல்விக்கு காரணம்” என்றார்.

மூலக்கதை