சாம்சுங் ஊழியர்களைப் பாதி வழியிலேயே மறித்து கைது செய்யும் காவல்துறை

  தமிழ் முரசு
சாம்சுங் ஊழியர்களைப் பாதி வழியிலேயே மறித்து கைது செய்யும் காவல்துறை

சென்னை: போராடச் சென்ற சாம்சுங் ஊழியர்களை வழியிலேயே மடக்கிக் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே சாம்சுங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்களுடனான சுமூகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர்.செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காவல்துறையினரைத் தாக்கியதாகக் கூறப்படும் 9 பேரை அவர்களது வீட்டில் வைத்து அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், புதன்கிழமை காலை போராட்டம் நடத்தும் இடத்தில் அமைக்கப்பட்ட பந்தல் மற்றும் நாற்காலிகளை வருவாய்த் துறையினர் உதவியுடன் காவல்துறையினர் அதிரடியாக அகற்றினர். இருப்பினும் ஊழியர்கள் வழக்கம்போல் போராட்டம் நடத்தினர்.சுங்குவார்சத்திரத்தில் வியாழக்கிழமையும் (அக்டோபர் 10) போராட்டம் தொடர்ந்தது. ஆயினும், போராடச் சென்ற சாம்சுங் ஊழியர்களைப் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். ஓட்டுநர் உரிமம், ஊழியர் அடையாள அட்டைகளைச் சோதனை செய்து அவர்களைக் கைது செய்கின்றனர். கைது செய்யப்படும் சாம்சுங் ஊழியர்கள், அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுமாங்காடு, எச்சூர், குன்னம் போன்ற இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை