‘எட்டில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்குள் பாலியல் வன்கொடுமை’

  தமிழ் முரசு
‘எட்டில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்குள் பாலியல் வன்கொடுமை’

நியூயார்க்: உலகளவில் எட்டில் ஒரு பெண் 18 வயதை அடைவதற்குள் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறார் அமைப்பு (UNICEF - யுனிசெஃப்) புதன்கிழமையன்று (அக்டோபர் 9) தெரிவித்தது.எண்ணிக்கையைப் பொறுத்தவரை 370 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் 18 வயதுக்குள் பாலியல் வன்கொடுமையை எதிர்நோக்குகின்றனர். உடல் ரிதியான தொடர்பில்லாத பாலியல் வன்முறைச் சம்பவங்களைக் கருத்தில்கொள்ளும்போது ஐந்தில் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையம்வழி இழைக்கப்படும் துன்புறுத்தல், வார்த்தைகளின் மூலம் இழைக்கப்படும் துன்புறுத்தல் உள்ளிட்டவை உடல் ரீதியாக மேற்கொள்ளப்படாத பாலியல் வன்கொடுமைச் செயல்களில் அடங்கும். ஐந்தில் ஒருவர் என்பது 650 மில்லியனாகும்.இதன் தொடர்பில் பொதுவாக பெண்கள்தான் ஆக அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும் 240-310 மில்லியனுக்கு இடைப்பட்ட ஆண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக யுனிசெஃபின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில், 11 ஆண்களில் ஒருவர் பிள்ளைப் பருவத்தில் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்.“இந்த மனித உரிமை மீறல் இவ்வளவு மோசமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இருக்கிறது. இதன் தொடர்பில் எழும் அவப்பெயர், நிலவரத்தைக் கணிப்பதில் இருக்கும் சவால்கள், புள்ளி விவரங்களைச் சேகரிக்கப் போதுமான முயற்சி இல்லாதது ஆகிய காரணங்களால் நிலைமையை முழுமையாக அறிவது கடினமாக இருக்கிறது,” என்று அறிக்கையை வெளியிடும்போது யுனிசெஃப் எடுத்துரைத்தது.சிறாருக்கு எதிரான வன்முறையை நிறுத்துவதன் தொடர்பில் முதன்முறையாக அனைத்துலக அமைச்சர்நிலை மாநாடு வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. கொலம்பியாவில் நடைபெறவிருக்கும் அந்த மாநாட்டை முன்னிட்டு யுனிசெஃபின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.உலகளவில் உடனடியாகத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதைத் தாங்கள் கண்டறிந்தத் தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக யுனிசெஃப் குறிப்பிட்டது. சட்டங்களைக் கடுமையாக்குவது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை அடையாளம் கண்டு அதுபற்றி தெரியப்படுத்தப் பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது போன்றவை அத்தகைய முயற்சிகளில் அடங்கும்.

மூலக்கதை