'நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்; இந்தியர்கள் கடின உழைப்பாளிகள்' - நியூசிலாந்து பிரதமர்
வியன்டியன்,ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதைப்போல கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அந்த வகையில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "நியூசிலாந்து பிரதமருடன் அற்புதமான சந்திப்பு நிகழ்ந்தது. ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் மீது அர்ப்பணிப்பு கொண்ட நியூசிலாந்துடனான இந்தியாவின் நட்பை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்த சந்திப்பின்போது கல்வி, சுற்றுலா மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்" என்று பதிவிட்டுள்ளார்.இதனிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-"நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். இந்திய நாட்டை நான் நேசிக்கிறேன், மிகவும் மதிக்கிறேன். நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் திறமையாக செயலாற்றி வருகிறார்கள். அவர்கள் மிகுந்த உத்வேகம் அளிப்பவர்கள், கடின உழைப்பாளிகள். பிரதமர் மோடியுடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது. என்னை இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அதற்கான சரியான நேரத்தை நாங்கள் விரைவில் முடிவு செய்வோம். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உறவை மேலும் பலப்படுத்த தொடர்ந்து உழைப்போம்."இவ்வாறு அவர் தெரிவித்தார்.