‘மூத்த ஹிஸ்புல்லா அதிகாரி உயிர் தப்பினார்’

  தமிழ் முரசு
‘மூத்த ஹிஸ்புல்லா அதிகாரி உயிர் தப்பினார்’

பெய்ரூட்: ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர், அவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களிலிருந்து உயிர் தப்பினார் என்று தற்காப்புத் துறையைச் சேர்ந்த மூவர் கூறினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் மூத்த அதிகாரி உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது. மேலும், தென் லெபனானில் உள்ள தங்களின் அமைதிப் படைகள் தொடர்ந்து ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது.பெய்ரூட்டின் மத்தியப் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய ஆகாயப் படைத் தாக்குதல்கள் குறைந்தது ஒரு ஹிஸ்புல்லா தலைவரையாவது குறிவைத்து மேற்கொள்ளப்பட்டவை என்று ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா வியாழக்கிழமையன்று முன்னதாகக் கூறியிருந்தது.இதற்கிடையே, வட காஸாவில் மக்கள் கடுமையான வெடிகுண்டுத் தாக்குதல்களை எதிர்நோக்கினர். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமையன்று அவர்கள் தப்பியோட நேரிட்டது.இஸ்ரேலிய துருப்புகள் ஜபாலியா நகரில் இருக்கும் அகதிகள் முகாமை நோக்கிச் செல்வதால் பலர் தாக்குதல்களுக்கு நடுவே சிக்கியுள்ளனர்.கடந்த வார இறுதியில் ஜபாலியா நகரைத் தாங்கள் முற்றுகையிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. ராணுவம், கடந்த செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 8) அகதிகள் முகாமிலிருந்தும் அந்த ஒட்டுமொத்த வட்டாரத்திலிருந்தும் வெளியேறுமாறு அப்பகுதிவாசிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டது.போர் ஓராண்டாக நீடித்து வந்தாலும் ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து மீண்டு வருவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.தற்போது ஜபாலியாவில் காயமுற்றோரையும் மரணமடைந்தோரையும் சென்றடைய முடியவில்லை என்று காஸா குடிமைத் தற்காப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு செல்வது மிகவும் கடினமாகவும் அபாயகரமானதாகவும் இருப்பதாக அமைப்பு குறிப்பிட்டது.ஜபாலியாவில் முன்பு கட்டடங்கள் இருந்த பகுதிகளில் இப்போது இடிபாடுகள் மட்டுமே இருப்பதை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் புதன்கிழமையன்று (அக்டோபர் 9) கண்டார். அங்கு வசித்த குடியிருப்பாளர்களின் பொருள்கள் இடிபாடுகளில் சிதறிக் கிடந்ததையும் அவர் கண்டார்.

மூலக்கதை