கொலையாளியின் மரண தண்டனையைக் குறைக்க அல்டன்டுயாவின் தந்தை ஆதரவு
புத்ரஜெயா: மங்கோலிய மாடல் அழகி அல்டன்டுயா ஷரிபுவின் தந்தை, கொலையாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்கோரும் விண்ணப்பத்துக்கு ஆதரவளித்துள்ளார்.கொலையாளியான காவல்துறை அதிகாரி அஸிலா ஹத்ரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தண்டனையை சிறைத் தண்டனையாகக் குறைக்க அவர் விண்ணப்பித்திருந்தார்.அஸிலாவைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் ஜே. குல்தீப் குமார், டாக்டர் ஷரிபு செட்டெவ்வின் கடிதத்தில் இடம்பெறும் சில பகுதிகளை வியாழக்கிழமையன்று (அக்டோபர் 10) நீதிமன்றத்தில் வாசித்தார். அக்கடிதத்தில் டாக்டர் ஷரிபு, ‘உயிரின் புனிதத்தைப்’ பற்றி எழுதியிருந்தார்.அஸிலாவின் மரண தண்டனையை நீதிமன்றம் 40 ஆண்டுச் சிறைத் தண்டனையாகக் குறைத்தது. அவருக்கு 12 பிரம்படிகள் தருமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.“மாண்டவரின் தந்தை அனுப்பிய கடிதம் எங்களிடம் இருக்கிறது. அவர், (குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட) மரண தண்டனையைக் குறைக்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டார்,” என்று திரு குல்தீப் வியாழக்கிழமையன்று தெரிவித்தார். தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்குமாறு அஸிலாவின் விண்ணப்பத்தை திரு குல்தீப், மூவரைக் கொண்ட நீதிபதிகள் குழுவிடம் சமர்ப்பித்தார்.அரசு தரப்பு அக்கடிதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று துணை அரசு வழக்கறிஞர் முகம்மது டுசுக்கி மொக்தார் கூறினார். “எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை,” என்றார் அவர். டாக்டர் ஷரிபுவின் கடிதத்தின் நம்பகத்தன்மையைப் பற்றி அவர் பேசினார்.மங்கோலிய, ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட அக்கடிதம் செய்தியாளர்களிடமும் காண்பிக்கப்பட்டது.டாக்டர் ஷரிபு, “எல்லா நாடுகளிலும் மனித குலத்தின் கொள்கைகளுக்கு மரியாதை அளித்து உண்மையை வெளிப்படுத்தும் போக்கு இருக்க வேண்டும் என்பதை ஆதரிப்போம்,” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.அஸிலா, தொடர் கொலையாளி என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் பாலியல் காரணங்களுக்காக அவர் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும் திரு குல்தீப் தெரிவித்தார்.