மீண்டும் மீண்டும் ஆழ்குழி: கவலையில் கோலாலம்பூர்வாசிகள்
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள கேசிங் இண்டா பகுதியில் ஏற்பட்ட திடீர் ஆழ்குழி மூடப்பட்ட பிறகும் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. மேலும் அது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகத் தொடங்கியுள்ளது.அது அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்குழி ஏற்பட்ட சாலை கோலாலம்பூர் நகர ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சாலை. அதில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணம் மேற்கொள்கின்றன. “கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த ஆழ்குழி சிறிதளவில் தோன்றியது, அதை தமது அண்டை வீட்டுக்காரர் அடையாளம் கண்டார்,” என்று ‘மேக்ஸ்வெல் டவர்ஸ்’ கூட்டுரிமை வீட்டில் வாழும் 56 வயது மரியா பெரேரா தெரிவித்தார். “இதுதொடர்பாக கோலாலம்பூர் நகர ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. சிறிதாக இருந்த ஆழ்குழியை அதிகாரிகள் சரிசெய்து மூடினர். ஆனால் அதே இடத்தில் சில நாள்களுக்கு பிறகு மீண்டும் அந்த ஆழ்குழி தோன்றியது,” என்று மரியா பெரேரா கூறினார். ஆழ்குழி இருக்கும் சாலையில் பயணம் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அச்சாலையில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் பெரும்பாலான அப்பகுதி மக்கள் தங்களது வாகனங்களை மாற்றுச் சாலைகளில் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இது பெரும் சிரமமாக இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். ஆழ்குழி சரியாக மூடப்படுதில்லை என்றும் அவர்கள் குறைகூறினர்.இந்நிலையில், ஆழ்குழி குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோலாலம்பூர் நகர ஆணையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 16ஆம் தேதிக்குள் சரிசெய்யப்படும் என்றும் அது கூறியுள்ளது.