மலேசியப் பெண்கள் வெளிநாட்டில் பிரசவிக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை

  தமிழ் முரசு
மலேசியப் பெண்கள் வெளிநாட்டில் பிரசவிக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை

கோலாலம்பூர்: வெளிநாட்டவரை மணமுடித்த மலேசியப் பெண்கள் வெளிநாட்டில் ஈன்றெடுக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமைத் தகுதியளிக்கும் மசோதாவுக்கு மலேசிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.பல மாதங்கள் நிலுவையில் போடப்பட்ட பின்னர் தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. மசோதாவில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவுகளுக்கு பொதுநலன் விரும்பிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அதற்கான அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைத் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது வியாழக்கிழமை (அக்டோபர் 17) வாக்ககெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 222 உறுப்பினர்களில், மூன்றில் இரு பங்கிற்கும் மேல், 206 பேர் ஆதரவாக வாக்களித்தனர். சட்டத்திருத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, மலேசியாவில் நிரந்தரவாசிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, விண்ணப்பம் எதுவுமின்றி தானாகவே குடியுரிமை வழங்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. நிரந்தரவாசிகளின் குழந்தைகளுக்கு நிரந்தரவாசத் தகுதி மட்டுமே வழங்கப்படும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, குடியுரிமை கேட்டு அந்தக் குழந்தைகள் பின்னர் விண்ணப்பம் செய்யலாம்.

மூலக்கதை