ஆகக் குறைவான ஓட்டம்: சொந்த மண்ணில் இந்திய அணிக்குத் தலைக்குனிவு

  தமிழ் முரசு
ஆகக் குறைவான ஓட்டம்: சொந்த மண்ணில் இந்திய அணிக்குத் தலைக்குனிவு

பெங்களூரு: அண்மையில் பங்ளாதேஷ் அணியைப் புரட்டியெடுத்த இந்திய கிரிக்கெட் அணி, இப்போது நியூசிலாந்து அணியிடம் அடிபணிந்து, வேண்டாத சாதனையைப் படைத்துள்ளது.நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ஓட்டங்களுக்குச் சுருண்டது. தாய்நாட்டில் அவ்வணி எடுத்த ஆகக் குறைவான ஓட்டங்கள் இதுதான். டெல்லியில் 1987ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 75 ஓட்டங்களை எடுத்திருந்ததே இந்திய அணி எடுத்த ஆகக் குறைவான ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி இந்தியா சென்றுள்ளது. புதன்கிழமை (அக்டோபர் 16) தொடங்கிய முதல் போட்டியின் முதல் நாள் மழையால் ரத்தானது. இரண்டாம் நாளில் பூவா தலையாவில் வென்ற இந்திய அணி முதலில் பந்தடித்தது. அவ்வணியில் ரிஷப் பன்ட் (20), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (13) என இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தைத் தொட்டனர். விராத் கோஹ்லி, சர்ஃபராஸ் கான், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் என ஐவர் ஓட்டக் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளையும் வில்லியம் ஓரூர்க் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்சைத் தொடங்கிய நியூசிலாந்து அணி, விறுவிறுவென ஓட்டங்களைக் குவித்து, ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் 13ஆவது ஒவரிலேயே முன்னிலை பெற்றது.

மூலக்கதை