மாறியது நெஞ்சம், மாற்றியது காலம்!

  தமிழ் முரசு
மாறியது நெஞ்சம், மாற்றியது காலம்!

“கட்சி தொடங்கி 40 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் தமிழகத்தில் நம்மால் ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியவில்லையே” எனச் சில மாதங்களுக்கு முன் தன்னைச் சந்திக்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர நிர்வாகிகள் தொண்டர்களிடம் மனம் புழுங்கினார் அக்கட்சித் தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ்.“கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே பாமக மீது மக்கள் மனதில் அது ‘வன்முறைக் கட்சி’ என்ற எண்ணத்தை சிலர் ஏற்படுத்திவிட்டனர்,” என்று அக்கட்சியினர் கூறினாலும், இப்படியோர் எண்ணம் ஏற்பட பாமகவினரும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த எண்ணம்தான் அதிகாரத்தை நோக்கி பாமக முன்னேறுவதற்கு தடையாக இருந்தது என்று அரசியல் பார்வையாளர்கள் அவ்வப்போது கூறியதுண்டு.தீபாவளி சமயத்தில் தென்மாவட்ட மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்னையிலிருந்து செல்லமுடியாத அளவிற்குத் தங்களின் செல்வாக்கான வடமாவட்ட முக்கியச் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு தடைகளை ஏற்படுத்துவார்கள் பாமகவினர். ‘மரம் வெட்டி’ கட்சி என்கிற கறையில் இருந்து (இமேஜ்) தன்னை விடுவித்துக்கொள்ள ‘பசுமைத்தாயகம்’ உள்ளிட்ட சில நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது அக்கட்சி.அதற்கு நல்ல பலனும் கிடைத்தாலும்கூட, கட்சியின் அடிமட்டத் தீவிர தொண்டர்கள் கையாளும் மோதல் போக்கு மாற்றுக் கட்சியினருக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்துவிடுகிறது.உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால்...தென் மாவட்டத்தைச் சேர்ந்த தொல்.திருமாவளவன், பாமகவுக்குத் தோதான வடமாவட்ட பகுதிகளில் செல்வாக்குடன் இருக்கிறார். அவரின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பலமாக இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் விசிக ஒரு சில பிரதிநிதிகளையாவது பெற்றுவிடுகிறது.தென்மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகாந்தின் தீவிர ரசிகர்களுடன் பாமகவினர் மோதல் போக்கை கடைப்பிடித்த ஒரு காலம் இருந்தது.இதனால் பாமக ஆதிக்கம் செலுத்திய தமிழகத்தின் வட மாவட்டங்களில் தனக்கென தனி செல்வாக்கை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார் விஜயகாந்த். அதன் விளைவாக காலப்போக்கில் கேப்டனின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் பாமகவின் செல்வாக்கான பகுதிகளிலும்கூட அக்கட்சியை முந்தி நின்றது.- இப்படி தென் மாவட்ட பிரபலங்கள், பாமக பகுதிகளில் செல்வாக்குப் பெற்றதற்கு பாமக தொண்டர்களின் சீண்டல் நடவடிக்கைகளும் அதைப் பெரிதாக கண்டிக்காத பாமகவின் தலைமையும்தான் முக்கியக் காரணம் என்று தேமுதிகவினர் பகிரங்கமாகச் சாடினர்.இக்கருத்தைச் ‘சின்ன டாக்டர்’களால் மறுக்கமுடியாது என்று அரசியல் பார்வையாளர்களும் கருத்துரைத்தனர்.கடந்த 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ‘மாற்றம் முன்னேற்றம்’ என்ற முழக்கத்துடன் பாமக சார்பில், அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அந்த நோக்கம் வெற்றிபெறாமல் போனாலும்கூட, முன்பு மத்தியில் கூட்டணி அமைச்சராக இருந்தபோது பல்வேறு நல்ல திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்தி உள்ளார்.எந்நேரமும் புகையிலை, போதைப் பாக்கு, மது உள்ளிட்டவை கிடைக்கும் என்ற தாராளப் போக்கு தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்து அவற்றைக் கட்டுப்படுத்தினார். மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தார்.பாமகவின் இன்னொரு அமைச்சராக இருந்த துரை, இந்திய ரயில்வே மூலம் பல சீர்திருத்தங்களைச் செய்தார்; தமிழ்நாட்டிற்கும் புதிய ரயில் சேவைகளை அதிகப்படுத்தினார்“இப்படி நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டே தான் வந்தது பாமக. ஆனால் ‘வன்முறைக் கட்சி’ என்கிற இமேஜ் இன்னும் முழுமையாகப் போகவில்லை.“இப்போது அதிகாரபூர்வமற்ற முறையில் கட்சியின் செயல் தலைவராக இருக்கும் அன்புமணியை அதிகாரபூர்வ செயல் தலைவராக ஆக்கினால் பாமகவின் ஆட்சி அதிகாரத்தை நோக்கிய நகர்வுக்குப் பலமாக இருக்கும்,” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பழைய பாமகவாக இருந்திருந்தால், ‘விரைவில் அரசியலுக்கு வருவேன்’ என்று நடிகர் விஜய் அறிவித்தபோதே, வடமாவட்டத்திலுள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் பெரிய இம்சைகளைச் சந்தித்திருக்கும்.‘வன்முறையின் ராஜா’ ராமதாஸ் என ‘பாபா’ பட சமயத்தில் ரஜினி அறிக்கை விட்டதுபோல் விஜய்யும் அறிக்கை அக்கப்போர்களை நடத்த வேண்டியிருந்தி ருக்கும்.கொள்கை ரீதி யாக தன் தந்தை டாக்டர் ராம தாசின் வழியை மகன் அன்புமணி, பின்பற்றி னாலும்கூட, ராமதாசின் சில அதிரடிப் போக்குகளை அன்புமணி பின்பற்றவில்லை என்பதே, இன்றைய நிலவரப்படி தெரிய வருகிறது.பாமகவின் செல்வாக்கான பகுதியாகப் பார்க்கப்படும் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு நடப்பதும் அதற்கு அன்புமணி வாழ்த்து கூறியதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அரசியல் எண்ணம் உண்டானதுமே, பிற கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதை கடந்த ஆண்டிலிருந்தே பின்பற்றி வருகிறார் விஜய். சென்ற ஆண்டே அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன விஜய், இப்போதும் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். இருவரும் தொலைபேசி மூலம் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக பேசிக் கொண்டிருந்ததாக தவெக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.“அதிமுக, விஜய்யை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பில்லை. விஜய்யும் அங்கு சேரமாட்டார். திமுக கூட்டணியில் சேர்ந்தால் கமலின் மக்கள் நீதி மையம் கரைந்ததைப் போல தவெகவும் கரைந்துவிடும். அதனால் அங்கும் கூட்டணி வைக்க மாட்டார் விஜய்.“பாஜகவுடன் சேரவும் வாய்ப்பில்லை. ஏற்கெனவே ஒருமுறை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்தவர் விஜய். அதனால் ‘ஆட்சியில் பங்கு’ கேட்டு திமுகவை எரிச்சலாக்கியிருக்கும் காங்கிரஸ் பார்வை விஜய் மீது விழுந்திருக்கிறது. இந்த நிலையில் பாமகவின் பாசப்பார்வையும் தவெக மீது பதிந்திருக்கிறது.“விஜய்யின் சொந்த ஊர் மதுரையை அடுத்த திருப்பத்தூர். விஜய் கட்சிக்கு குடைச்சல் கொடுத்து, மீண்டும் ஒரு தென் மாவட்ட பிரபலம், வடமாவட்டத்தில் செல்வாக்கு பெறுவதற்கு காரணமாக இருப்பதைவிட சுமுக உறவு வைத்துக்கொண்டால் தங்களின் பிடியிலேயே வடமாவட்டம் இருக்கும், விஜய்யின் ரசிகர்களிடமும் நல்ல பெயர் வாங்கலாம் என்பதே அன்புமணியின் கணக்கு,” என்கிறார்கள் தமிழக அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் பார்வையாளர்கள்.இவர் கணக்கு இப்படி இருந்தாலும்... அவர் கணக்கு அப்படி இருந்தாலும்... மக்கள் கணக்கு எப்படியோ?!

மூலக்கதை