மூச்சுவிடுவதில் பிரச்சினை; எதிரே நிற்போர் தெரியவில்லை: திணறும் டெல்லி

  தமிழ் முரசு
மூச்சுவிடுவதில் பிரச்சினை; எதிரே நிற்போர் தெரியவில்லை: திணறும் டெல்லி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஏற்கெனவே காற்றின் தரம் குறைந்திருக்கும் நிலையில் பட்டாசு வெடிக்கப்பட்டதாலும் அண்டை மாநிலங்களில் மரக்கட்டைகள் எரிக்கப்படுவதாலும் புகைமூட்டம் உருவாகி எதிரே இருப்போரைக் காண இயலாத அளவுக்குக் கண்ணை மறைத்து வருகிறது.டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் காணப்படுகிறது. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாசப் பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்குப் பட்டாசு வெடிக்க அங்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், டெல்லியில் பட்டாசு விற்பனை செய்யவும் சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஆங்காங்கே தடை மீறப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் தீபாவளிப் பண்டிகை அன்று டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக இருந்தது.பட்டாசு வெடிப்பதற்கான தடையை டெல்லி அரசாங்கம் சரியாக அமல்படுத்தவில்லை என உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) காலை 8 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு 384 ஆகப் பதிவாகி உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்(CPCB) தெரிவித்துள்ளது. அதேபோல, காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு(SAFAR) வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 400க்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்றுத் தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் ஓர் அளவீடு ஆகும்.இந்தக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது, 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது, 401 முதல் 500 வரை இருந்தால் மிகவும் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது என்று பொருள்.

மூலக்கதை