சாத் பூஜை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
சென்னை,இந்து கலாச்சாரத்தில் சூரிய வழிபாடு என்பது மிகவும் முக்கிய அம்சமாகும். சூரியனைப் போற்றி வணங்கும் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையாக சாத் பூஜை திகழ்கிறது. பீகார், கிழக்கு உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் ஆகிய வட மாநிலங்களில் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சாத் பூஜை நேற்று தொடங்கியது. நாளை மறுநாள் (8.11.2024) அன்று நிறைவடைகிறது. 4 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.சூரியனை வணங்கி பூஜை செய்வதால் சூரிய பகவானின் ஆற்றலால் நோய்கள் குணமடைந்து ஆரோக்கியம் பெருகும், வாழ்வில் மகிழ்ச்சி மேலோங்கும் என்பது ஐதீகம்.இந்த நிலையில், சாத் பூஜையையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நம்பிக்கை, தூய்மை மற்றும் சூரிய பகவான் வழிபாட்டின் விசேஷமிக்க திருவிழாவான சாத் பூஜை திருநாளில், அனைவருக்கும், குறிப்பாக விரதமிருப்பவர்கள் மற்றும் பக்தர்களுக்கு இதயபூர்வ நல்வாழ்த்துக்கள். சூரிய பகவானும், சத்தி மாதாவும் சமுதாயத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், வைராக்கியத்தையும் புகட்டி, நம் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருக ஆசி வழங்கட்டும். ஜெய் சத்தி மாதா!" என்று தெரிவித்துள்ளார்.