ரெயில் உணவை சாப்பிட்டதால் கோவை வீராங்கனை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - ரெயில்வே நிர்வாகம் மறுப்பு

  தினத்தந்தி
ரெயில் உணவை சாப்பிட்டதால் கோவை வீராங்கனை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு  ரெயில்வே நிர்வாகம் மறுப்பு

சென்னை, கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரெயிலில் மத்திய பிரதேசம் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார். ரெயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்காக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சிக்கன் ரைஸ் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது. மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரெயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். அவர், ரெயில் சென்னை வந்ததும் எலினாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் எலினாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.இந்நிலையில் கோவை வீராங்கனை ரெயில் உணவை சாப்பிட்டு உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் அளித்த விளக்கத்தில், கடந்த 15-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து கிளம்பிய விரைவு ரெயிலில் பயணித்த கோவையை சேர்ந்த பள்ளி மாணவி எலினா சாப்பிட்டதாக கூறப்படும் சிக்கன் ரைஸ் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) விநியோகிக்கும் உணவுப்பட்டியலில் கிடையாது. மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக 139 என்ற மருத்துவ உதவி எண்ணை தொடர்பு கொண்டார். மாணவியை மருத்துவமனையில் அனுமதிக்க பால்ஹர்ஷா ரெயில்நிலையத்தில் டாக்டர்கள் அறிவுரை வழங்கிய நிலையில் அவர் தொடர்ந்து பயணம் செய்ய முடிவு செய்தார் என்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை