மராட்டிய மாநிலம்: மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து சமாஜ்வாடி விலகுவதாக அறிவிப்பு
மும்பை,மராட்டிய மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஸ் அகாடியில் சமாஜ்வாடி கட்சி அங்கம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில், மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாடி கட்சி தற்போது அறிவித்துள்ளது. பாபர் மசூதியை இடித்தவர்களை வாழ்த்தும் விதமாக மகாவிகாஸ் அகாடியில் அங்கம் வகிக்கும் சிவசேனா(உத்தவ் தாக்கரே) அணி சார்பில் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், உத்தவ் தாக்கரேவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவரும், சிவசேனா எம்.எல்.சி.யுமான மிலிந்த் நர்வேகர் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பாபர் மசூதி இடிப்பை புகழ்ந்து பதிவு ஒன்று வெளியிட்டிருப்பதாகவும் சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மராட்டிய மாநில சமாஜ்வாடி தலைவர் அபு ஆஸ்மி கூறுகையில், "நாங்கள் சமாஜ்வாடி கூட்டணியில் இருந்து விலகுகிறோம். இது தொடர்பாக கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவிடம் பேச உள்ளோம். மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் உள்ளவர்கள் பாபர் மசூதி இடிப்பு குறித்து இவ்வாறு பேசினால், அவர்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?" என்று தெரிவித்தார்.