எனது உடல் தகுதியை நினைத்து பெருமைப்படுகிறேன் - இந்திய வீராங்கனை பேட்டி
வதோதரா,வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 211 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகி விருதை ரேணுகா சிங் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.முதல் போட்டி முடிந்ததும் ஆட்டநாயகி விருதை பெற்ற ரேணுகா சிங் கூறியதாவது, ஒரு நாள் போட்டியில் நான் முதல்முறையாக 5 விக்கெட் எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உடல்தகுதியை மேம்படுத்த கடினமாக உழைக்கிறேன். அதனால் தான் என்னால் தொடர்ச்சியாக 8 ஓவர்கள் பந்துவீச முடிந்தது. எனது உடல்தகுதியை நினைத்து பெருமைப்படுகிறேன். இங்கு நிலவிய குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.