அது மட்டும் இல்லையென்றால் ரோகித் சர்மா... - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
மெல்போர்ன்,இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கியதால் இந்த டெஸ்ட் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்பட்டது. இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.இந்த தோல்விக்கு ரோகித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியில் ரோகித் இல்லாத சூழலில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது போட்டியிலிருந்து கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மா பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டன்ஷிப்பிலும் சொதப்பி வருகிறார். இந்நிலையில் கேப்டனாக மட்டும் இல்லையென்றால் ரோகித் சர்மா தற்போதைய இந்திய அணியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த ரோகித் சர்மா தடுமாறுகிறார். அவருடைய பார்ம் அவருக்கு ஆதரவு கொடுப்பதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் கேப்டனாக இருப்பதால் அவர் விளையாடுகிறார். இல்லையெனில் இந்திய அணிக்காக விளையாட முடியாது. ஜெய்ஸ்வால், ராகுல், கில் ஆகியோர் இருப்பார்கள். ஆனால் தற்போது தடுமாறும் விதத்தை வைத்து ரோகித் சர்மாவுக்கு பிளேயிங் லெவனில் இடம் இருக்காது என்பதே நிதர்சனமாகும். இந்தத் தொடரை குறைந்தபட்சம் சமன் செய்ய அடுத்த போட்டியை நீங்கள் வென்றாக வேண்டும். அதற்கு அவர் கேப்டனாக அணியுடன் இருப்பார். ஆனால் அவருடைய பார்ம் இந்தியாவிலும் சுமாராகவே இருந்தது. இப்படி ரோகித் சர்மா பேட்டிங் செய்வதை பார்ப்பது ஏமாற்றமாக இருக்கிறது. அவர் எப்போதும் நன்றாக விளையாடுவதையே நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் பார்ம் மற்றும் உடல்நிலை ஆகியவை ரோகித் சர்மாவை முன்னோக்கி அழைத்துச் செல்வது போல் எனக்கு தெரியவில்லை" என்று கூறினார்.