சத்தீஷ்காரில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
ராய்ப்பூர்,இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஷ்கார் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில், சத்தீஷ்காரின் பீஜப்பூர் மாவட்டத்தில் மஹாதியோ காட் பகுதியில் இன்று வழக்கமாக ரோந்து பணியில் மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகுண்டை ஒரு வீரர் எதிர்பாராதவிதமாக அழுத்த அது வெடித்தது. இதில் ஒரு பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார். இதையடுத்து சக வீரர்கள் அவரை மீட்டு பிஜப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் மேலும் சில கண்ணி வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.முன்னதாக நேற்று, நாடான்பூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் ஒரு கிராமவாசி உயிரிழந்தார் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.