பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்-அமைச்சர் சொன்னதில் தான் உண்மை உள்ளது - சபாநாயகர் அப்பாவு
சென்னை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தின் போது ஆளும் கட்சி தரப்பினரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் காரசாரமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒருவருக்கொருவர் சராமாரியாக விமர்சனம் செய்தனர். இந்த சூழலில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சட்டசபையில் சபாநாயகரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இவ்விவகாரத்தில், 12 நாட்கள் கழித்துதான் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என சட்டசபையில் முதல்-அமைச்சர் குற்றம்சாட்டி எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்திருந்த நிலையில், இதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பொள்ளாச்சி சம்பவம் குறித்து சட்டசபையில் அ.தி.மு.க. சார்பிலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்-அமைச்சர் சொன்னதில் தான் உண்மை உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறுகையில், "பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ஆவணங்கள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி வழக்கில் தாமதமாக எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டது என முதல்-அமைச்சர் கூறியதே உண்மை. பாலியல் வன்கொடுமை நடந்து 12 நாட்களுக்கு பின்னரே எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதுஇரண்டு தரப்பு ஆதாரங்களையும் நான் பார்த்துவிட்டேன், நான் கூறும் தீர்ப்பு தான் இறுதியான தீர்ப்பு. இருவரும் இதோடு முடித்துக் கொள்ளுங்கள் என கூறியதால் முடித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.சபாநாயகரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டனர்.