அ.தி.மு.க. கருப்பு சட்டை அணிந்து வந்தபோது கோபம் வரவில்லை; சிரிப்புதான் வந்தது - மு.க.ஸ்டாலின்

  தினத்தந்தி
அ.தி.மு.க. கருப்பு சட்டை அணிந்து வந்தபோது கோபம் வரவில்லை; சிரிப்புதான் வந்தது  மு.க.ஸ்டாலின்

சென்னை, சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதிலுரையாற்றி வருகிறார். இந்நிலையில் சட்டசபைக்கு கருப்பு உடை அணிந்து கொண்டு வருகை தந்த அ.தி.மு.க. குறித்து பேசியதோடு அவர்களை நோக்கி தன்னுடைய கேள்விகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.இதுதொடர்பாக பேசிய அவர், " எதிர்கட்சியான அ.தி.மு.க. சார்பில் கருப்பு உடை அணிந்து வந்த போது எனக்கு உண்மையில் கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. அதனை பார்த்துவிட்டு இப்படியாவது கருப்பு சட்டை போடுகிறார்களே என்று மகிழ்ச்சி அடைந்தேன். கருப்பு சட்டை அணிந்து வருவது என்பது உங்களது தனிப்பட்ட உரிமை தான். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டமன்றத்தை ஏன் அவமதிப்பு செய்கிறீர்கள்?" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர், "ஈவு, இரக்கமில்லாமல் மாநில அரசுக்கு வரவேண்டிய தொகையை மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது. பேரிடர் நிதியை கூட தராமல் உள்ள மத்திய அரசை கண்டித்து நீங்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தால் உங்களை நான் பாராட்டி இருப்பேன். கவர்னரை கண்டித்து கருப்பு சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? இருட்டு அரசியல் செய்பவர்களுக்கு கருப்பு சட்டை அணிய தார்மீக உரிமை இல்லை.விடியல் எங்கே என எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். விடியல் தரப்போகிறோம் என சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல. விடியலை பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மூலக்கதை