"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற அலைபேசி செயலி அறிமுகம்

  தினத்தந்தி
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற அலைபேசி செயலி அறிமுகம்

சென்னை,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-தமிழ்நாடு அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தினை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 10 ஆகஸ்ட் 2022 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க, போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.16.05.2024 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய மூன்று வல்லுநர்கள் கொண்ட போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டிற்கான இயக்க மேலாண்மை அலகு என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றம் கல்லூரிகளில் 15,266 போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, 1,99,136 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.போதைப் பொருள் எதிர்ப்பு மன்றம் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் பொருட்டு, சிறப்பாக செயல்படும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றத்தினை தேர்வு செய்து பரிசுகள் வழங்கிட மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்களை தேர்வு செய்யும்.கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த புகார்கள் அளிக்க ஏதுவாக புதிதாக "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற அலைபேசி செயலி இன்று (11.01.2025) தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் புகார் அளிப்பவர்களின் பெயர்கள் மற்றும் தரவுகள் ரகசியம் காக்கப்படும். மேலும் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு இயக்கத்திற்கான இலட்சினை (Logo)-யும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை