கவர்னர் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பெ.சண்முகம்
சென்னை,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தன்னுடைய எக்ஸ் பதிவில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரது முதல்-அமைச்சர் பதவியை குறிப்பிடாமல் ஒரு தனி மனிதராக பாவித்து ஒரு பதிவிட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியதாகும். தமிழ்நாட்டின் மரபின்படிதான் நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் பாட முடியுமென்று சொன்னதை, தேசிய கீதமே பாட முடியாது என்று சொன்னதாக புரளி கிளப்புகிறார். நாளை வருகிற இன்னொரு கவர்னர் இன்னொரு நேரம் பாட வேண்டுமென்று கேட்டால் அப்படி செய்ய முடியுமா? மேலும், இதனால் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பு செய்துவிட்டார்கள். அவர்கள் தத்துவமே அப்படித்தான் என்று பதிவிடுவது எல்லாம் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பாணி திசைதிருப்பல் வேலையே.கவர்னரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், 'திராவிட மாதிரி என்று எதுவும் இல்லை, திராவிடத் தத்துவம் காலவாதியாகிவிட்டது' என்று ஒரு நாளிதழுக்கு கொடுத்த பேட்டியை முதன்மைப்படுத்தி வைத்திருக்கும் அளவிற்கு அத்துமீறி நடந்து கொள்பவர் என்பதையும் அதைப் பெருமையாக கருதிக் கொண்டிருப்பவர் என்பதையும் காண முடிகிறது. கவர்னராக நியமிக்கப்பட்டாலே வானளாவிய அதிகாரம் இருப்பதாக கருதிக் கொண்டு அடாவடி செய்வதை கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் சங்பரிவாரம் ஏற்கவோ மதிக்கவோ மாட்டோம் என்று சொன்னதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. எனவே, கவர்னர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு, தான் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவருக்கு அத்தகைய குணமில்லை எனில் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.