கொல்கத்தா: வலுப்படுத்தும் பணியின்போது திடீரென சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்
கொல்கத்தா,மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் தெற்கே பாகா ஜதின் பகுதியில் 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. கட்டிடம் கட்டி 10 ஆண்டுகள் ஆன நிலையில், அது வலதுபுறம் சாய்ந்துள்ளது. இதனால், அதனை வலுப்படுத்துவதற்காக அரியானாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு ஒப்பந்த பணி வழங்கப்பட்டது.எனினும், இதுபற்றி முறையாக கொல்கத்தா மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த கட்டிடத்தின் வலுப்படுத்தும் பணியின்போது, அது சரிந்து விழுந்தது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் முன்பே மற்றொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர். இந்த சூழலில், கட்டிடம் முழுவதும் இடிக்கப்படும் என தெரிகிறது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.கட்டிடம் கட்டுமான ஒப்பந்ததாரரை போலீசார் தேடி வருகின்றனர். ஜாதவ்பூர் எம்.எல்.ஏ. தேபபிரதா மஜும்தார் கூறும்போது, எந்தவித அங்கீகாரமும் இன்றி கட்டுமான ஒப்பந்ததாரர் பணியை மேற்கொண்டு இருக்கிறார். அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.கடந்த ஆண்டு மார்ச்சில், கார்டன் ரீச் பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியானார்கள். பிளாட்டின் உரிமையாளர்களில் ஒருவர் கூறும்போது, கூடுதலாக ஒரு தளம் சட்டவிரோத வகையில் கட்டப்பட்டது. தரம் குறைந்த பொருட்கள் சேர்க்கப்பட்டன என கூறினார்.அரசியல் பின்னணி கொண்ட அவர்களை எதிர்த்து எங்களால் தைரியத்துடன் போராட முடியாது. இந்த பிளாட்டை வாங்க எங்களுடைய சேமிப்புகளை எல்லாம் செலவிட்டு விட்டோம் என வேதனையுடன் கூறினார்.