காசி தமிழ் சங்கமம் பதிவுக்கான இணையதள சேவை தொடங்கியது

  தினத்தந்தி
காசி தமிழ் சங்கமம் பதிவுக்கான இணையதள சேவை தொடங்கியது

புதுடெல்லி, காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது கட்டப் பதிவுக்கான இணையதள சேவையை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழகம் - காசி இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்டத்தின் மூலம் மீண்டும் உயிர் பெறும். பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த காசி தமிழ்ச் சங்கமம், தமிழ்நாடு - காசி இடையேயான காலத்தால் அழியாத பிணைப்பை கொண்டாடவும், நாகரிக தொடர்புகளை வலுப்படுத்தவும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை மேம்படுத்தவும் உத்வேகம் அளிப்பதற்கான முயற்சியாகும்.இந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமம் மகா கும்பமேளா நிகழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து நடைபெறுவதால் தனிச் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அயோத்தியில் குழந்தை ராமரின் 'பிராண பிரதிஷ்டைக்கு' பிறகு நடைபெறும் முதல் சங்கம நிகழ்ச்சி இது. காசி தமிழ் சங்கமம் 3-வது கட்டத்தில் தமிழக மக்கள் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கும். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு பிப்ரவரி 24-ம் தேதி முடிவடையும். சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில், பிப்ரவரி 1-ம் தேதி வரை இதனை பதிவு செய்து கொள்ளலாம்" என்று தர்மேந்திர பிரதான் கூறினார். உத்தர பிரதேசத்தின் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாசார தொடர்பை எடுத்துரைத்து வலுப்படுத்த, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 2022ல் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை