கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி

  தினத்தந்தி
கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி

சென்னை,கடந்த பிப்ரவரி மாதம் 2024-2025ம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசு நிதிநிலை அறிக்கை ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பொதுப்பணித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட நிதி மற்றும் மனித வளம் மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் சர்வதேச கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு கூட்டங்கள் நடத்திடும் வகையில் நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார்.ரூ.102 கோடியில் 5,000 இருக்கைகளுடன் மாநாட்டுக் கூடம், ரூ.172 கோடியில் 10,000 பேர் அமரும் அரங்கம் அமைகிறது. கூட்ட அரங்குகள், அரங்கம் உள்ளிட்ட வசதிகள் ரூ.108 கோடியில் அமைக்கப்பட உள்ளது. வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவை ரூ.105 கோடியில் அமைகிறது. திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10,000 வாகனங்களை நிறுத்தும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.இதற்கான டெண்டர் சமீபத்தில் தமிழக அரசு கோரியது. இதனை தொடர்ந்து கடந்த 31-ம் தேதி கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி தமிழக பொதுப்பணித்துறை விண்ணப்பித்துள்ளது. இந்த அனுமதி கிடைக்கப்பட்ட உடன் கட்டுமான பணிகளுக்கு தேவையான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர்.இந்த நிலையில், சென்னை முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது. 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடி செலவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 2025-ம் ஆண்டின் இறுதி அல்லது 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் அரங்கத்தின் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை