திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கிரிவலம்
திருவண்ணாமலை,பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. மலையே சிவனாக வணங்கப்படுவதால் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று வருகின்றனர். கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாளும் வருடத்தில் 2 முறை பக்தர்களை போலவே அருணாசலேஸ்வரரும் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.பிருங்கி முனிவர் அருணாசலேஸ்வரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்த போது வண்டு உருவில் மாறி அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கியிருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக ஐதீகம். இது மனித வாழ்வில் கணவன்-மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு கூடல் ஏற்படுவது வாழ்வின் ஒரு நிலை என்பதை உணர்த்துகிறது.இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் தை மாதம் 2-ம் நாள் திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் உள்ள திருவூடல் வீதியில் நடைபெற்ற விழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு அம்மன் சென்றுவிட்டார். அதன் பின்னர் சாமி குமரக்கோவிலுக்கு சென்றார். தொடர்ந்து அங்கிருந்து நேற்று அதிகாலை அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கிரிவலம் புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். தொடர்ந்து சாமி கிரிவலம் சென்று கோவிலை வந்தடைந்தார். பின்னர் கோவிலில் மறுவூடல் விழா நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் மேளதாளங்கள் முழங்க வெளியில் இருந்து உள்ளே வந்து அவரது சன்னதியில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு வந்த அம்மன், சாமி சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தியின் சன்னதியில் கதவை மூடி உள்ளே இருப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.பின்னர் அருணாசலேஸ்வரர் உற்சவ மூர்த்தி சன்னதியின் முன்பு மேள தாளங்கள் முழங்க முன்னும், பின்னும் 3 முறை ஆடியபடி வந்து ஊடல் செய்து, சாமி அம்மனுடன் இணைவது போன்று மறுவூடல் விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் ஓதுவார், சாமியின் முன்பு திருவூடல் மற்றும் மறுவூடல் விழாவின் கதையை பாடினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.