பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

  தினத்தந்தி
பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை, பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை, பரனூர் சுங்கச்சாவடி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.நேற்று முன் தினம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக பண்டிகை காலங்களில் சென்னையில் கல்வி, தொழில், வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.சொந்த ஊர் சென்ற மக்களின் வசதிக்காக ஆயிரக்கணக்கான சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு தொடர் விடுமுறை முடிந்து தற்போது சென்னையை நோக்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும் சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து வருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

மூலக்கதை