நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது
மும்பை,மராட்டிய மாநிலம் மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு சரண் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி பிரபல நடிகை கரீனா கபூர் ஆவார். நேற்று முன்தினம் இரவு சயீப் அலிகான் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலை 2 மணியளவில் சத்தம்கேட்டு சயீப் அலிகான் எழுந்தார்.அவர் வெளியே வந்து பார்த்தபோது மர்மநபர் ஒருவர், வீட்டு வேலைக்கார பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் மர்மநபர் புகுந்ததை பார்த்து நடிகர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த நபரை பிடிக்க முயன்றார். இருவரும் கடுமையாக மோதிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் அந்த நபர், நடிகர் சயீப் அலிகானை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், உடலில் 6 இடங்களில் நடிகருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.இதையடுத்து கத்தியால் குத்திய நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடந்த சயீப் அலிகானை குடும்பத்தினர் மீட்டு பாந்திரா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சயீப் அலிகான் நலமாக உள்ளார்.இதற்கிடையே போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சயீப் அலிகானை கத்தியால் குத்திய நபர், எதற்காக அவரது வீட்டுக்குள் நுழைந்து தாக்கினார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை அடிக்கும் நோக்கில் அவர் வீட்டுக்குள் நுழைந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பிஓடிய நபரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.இந்தநிலையில், நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய நபரை பாந்திரா போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.