மத்திய பட்ஜெட்டை 1-ந்தேதி தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

  தினத்தந்தி
மத்திய பட்ஜெட்டை 1ந்தேதி தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தொழில்துறை மற்றும் பல்வேறு துறையினருடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு மாத காலம் நடத்திய ஆலோசனையை கடந்த 6-ம் தேதி நிறைவு செய்தார். இந்த ஆண்டு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில், என்னென்ன அறிவிப்புகள் வெளியாகப்போகின்றன, என்னென்ன மாற்றங்களை நிதி மந்திரி செய்யப்போகிறார்? என்பதை அறிய தொழில் துறையினர் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 31ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிப். 1ம் தேதி 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, ஜன. 31 முதல் பிப். 13 வரையும், 2ம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.நிதி ஒருங்கிணைப்பு, வரி முறையை எளிமைப்படுத்தல் மற்றும் முதலீடு சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றில் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச் செலவினங்களை அதிகரிப்பது, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, தனியார் துறை முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

மூலக்கதை