இன்னும் 10-12 வருடங்கள் கழித்து தோனி, ரோகித் வரிசையில் ரிஷப் பண்டும் இருப்பார் - சஞ்சீவ் கோயங்கா
லக்னோ, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை ரூ. 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற வரலாற்று சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். இதைத் தொடர்ந்து லக்னோ அணியின் புதிய கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த 10 - 12 வருடங்களில் ஐ.பி.எல். வரலாற்றின் வெற்றிகரமான கேப்டன்களான தோனி, ரோகித் சர்மா ஆகியோரது பெயர்களுடன் ரிஷப் பண்ட் பெயர் இருக்கும் என்று சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எனது வார்த்தைகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 10 - 12 வருடங்கள் கழித்து வெற்றிகரமான ஐ.பி.எல். கேப்டன்களின் பட்டியலில் தோனி, ரோகித்துடன் பண்ட் இருப்பார். அவரிடம் இயற்கையவே கேப்டன்சி இருப்பதை பார்க்கிறேன். அவர் ஐ.பி.எல். தொடரில் நீங்கள் பார்த்த ஒரு சிறந்த கேப்டனாக உருவெடுப்பார்." என்று கூறினார்.