எப்போதும் பணம் மட்டுமே முக்கியமல்ல - ரிஷப் பண்ட்

  தினத்தந்தி
எப்போதும் பணம் மட்டுமே முக்கியமல்ல  ரிஷப் பண்ட்

லக்னோ, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை ரூ. 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற வரலாற்று சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். இதைத் தொடர்ந்து லக்னோ அணியின் புதிய கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மெகா ஏலத்திற்கு முன்பாக அதிகமான சம்பளம் வேண்டும் என்பதற்காக ரிஷப் பண்ட் டெல்லி அணியிலிருந்து வெளியேறியதாக ஹெமங் பதானி சமீபத்தில் அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருந்தார்.இந்நிலையில் ஏலத்தில் தம்மை பஞ்சாப் அணி வாங்கி விடுமோ என்று பயந்ததாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். மேலும் பணத்துக்காக தாம் ஏலத்தில் பங்கேற்கவில்லை என்றும் அவர் புதிய கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பஞ்சாப் அணி பற்றி மட்டுமே எனக்கு ஒரு டென்ஷன் இருந்தது. அவர்களிடம் அதிக பணமும் இருந்தது. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு அவர்கள் வாங்கியதும் லக்னோ அணிக்காக நாம் வாங்கப்படுவோம் என்று கருதினேன். எனது செயல்முறைகள் எளிதானது. ஏலத்திற்கு வந்தபோது பணம் மட்டும் என்னுடைய மனதில் இல்லை. ரூ. 5 அல்லது 10 கோடிக்கு நான் வாங்கப்படுவேனா என்பது பற்றி நான் கவலையும் படவில்லை. அதற்காக என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். அது எளிதல்ல. எப்போதும் பணம் மட்டுமே முக்கியமல்ல என்ற உண்மையை உங்களுக்கு நீங்களே சொல்லி சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். பணம் என்பது ஒரு அங்கம் மட்டுமே. பணத்தை பெறுவது சிறந்த விஷயம். ஆனால் அது மட்டுமே முதன்மையானதாக இருக்கக் கூடாது. இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால் எனக்கு எந்த அழுத்தமும் இருக்காது என்று எங்கள் அணியின் உரிமையாளரே கூறியுள்ளார். அவரே அப்படி சொல்லும்போது எனக்கும் எந்த அழுத்தமும் இல்லை. லக்னோ அணி முதல் கோப்பையை வெல்ல என்னுடைய 200 சதவீத பங்களிப்பை கொடுப்பேன்" என்று கூறினார்.

மூலக்கதை