இது வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு - சுப்மன் கில் குறித்து அஸ்வின்

  தினத்தந்தி
இது வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு  சுப்மன் கில் குறித்து அஸ்வின்

சென்னை, 8 அணிகள் இடையிலான 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயிக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக ரோகித் தொடர்கின்ற வேளையில் துணை கேப்டன் பதவி சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பும்ராவை அடுத்த கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.இந்நிலையில் சுப்மன் கில்லை வருங்கால கேப்டனாக உருவாக்குவதற்காகவே பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த முடிவு சரியா அல்லது தவறா என்பது பற்றி நான் பேச விரும்பவில்லை. கடந்த தொடரிலேயே துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த அவர் ஒரு சில டெஸ்ட் போட்டிகளிலும் அந்த பதவியை வகித்தார். நான் இப்படி சொல்வது தவறாக கூட இருக்கலாம். இது வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு. அவர்கள் வருங்காலத்தில் யார் கேப்டனாக இருப்பார்கள் என்பதை பார்க்கிறார்கள். தற்போது டி20 அணிக்கு அக்சர் பட்டேல் துணை கேப்டனாக இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் ஒரே இடத்துக்காக ஜடேஜா மற்றும் அக்சர் படேலுக்கு இடையே போட்டி இருக்கிறது. ரிஷப் பண்ட் - கே.எல். ராகுல் ஆகியோருக்கு இடையேயும் விக்கெட் கீப்பர் இடத்திற்காக போட்டி நிலவுகிறது. எனவே பிளேயிங் லெவனில் 100 சதவீதம் இடம் பிடிக்கப் போகும் வீரர்தான் துணை கேப்டனாக இருக்க முடியும். சுப்மன் கில் கேப்டன்ஷிப் பொறுப்புக்கு சரியானவர் என்றால் அவர் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவருக்கு ஆதரவு கொடுக்க இன்னும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள்" என்று கூறினார்.

மூலக்கதை