டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டி
புதுடெல்லி,70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக ஆம் ஆத்மி மூன்றாவது முறையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில், இந்த தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர் என்று டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியின் கூற்றுப்படி, பாஜகவின் பர்வேஷ் வர்மா மற்றும் காங்கிரசின் சந்தீப் தீட்சித் ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரப் போட்டியில் ஈடுபட்டுள்ள புதுடெல்லியில் அதிகபட்சமாக 23 வேட்பாளர்கள் உள்ளனர்.புதுடெல்லியை தொடர்ந்து ஜனக்புரி 16 வேட்பாளர்களுடன், ரோஹ்தாஸ் நகர், காரவால் நகர் மற்றும் லட்சுமி நகர் ஆகியவற்றில் தலா 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.மாறாக, படேல் நகர் மற்றும் கஸ்தூரிபா நகர் ஆகிய இடங்களில் தலா ஐந்து பேர் வீதம் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் உள்ளனர். 2020ல் பட்டியலின வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட படேல் நகர் தொகுதியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் வெறும் நான்கு பேர் மட்டுமே களத்தில் போட்டியிட்டனர்.70 சட்டசபை தொகுதிகளில் 38 தொகுதிகளில் 10க்கும் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திலக் நகர், மங்கோல்புரி மற்றும் கிரேட்டர் கைலாஷ் போன்ற குறிப்பிடத்தக்க சட்டசபை தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்களும், சாந்தினி சவுக், ராஜேந்திர நகர் மற்றும் மாளவியா நகர் ஆகிய தலா 7 பேரும் போட்டியிடுகின்றனர். ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் 70 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அதே நேரத்தில் பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது, அதன் கூட்டணிக் கட்சிகளான ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் லோக்தந்திரிக் ஜன் சக்தி கட்சிக்கு இரண்டு இடங்கள் போட்டியிடுகிறது.பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 69 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமித்துள்ளது. ஜனவரி 10ஆம் தேதி தொடங்கிய ஒரு வார கால வேட்புமனு தாக்கலில் மொத்தம் 1,522 வேட்புமனுக்களில் 981 வேட்பாளர்கள் வேட்புமனு சமர்பித்தனர். ஜனவரி 18 அன்று ஆய்வுக்குப் பிறகு இறுதி எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.