22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்: மத்தியக் குழு இன்று தமிழகம் வருகை

  தினத்தந்தி
22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்: மத்தியக் குழு இன்று தமிழகம் வருகை

சென்னை, வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாகத் தொடங்கிய நிலையில், தொடர்ச்சியாக பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால், அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. மேக மூட்டம், மழைப்பொழிவும் உள்ளதால், விவசாயிகள் நெல்லை உலர வைப்பதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த சூழலில் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில், உணவுத்துறை செயலர் கடிதம் அனுப்பியிருந்தார்இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் நெற்பயிர்களை ஆய்வு செய்ய குழு அறிவிக்கப்பட்டது. இதில், மத்திய உணவுத்துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த உதவி இயக்குநர்கள் நவீன், பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தமிழகம் வரும் இந்த குழு, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் இந்திய உணவுக்கழக அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுப்பணிகளை தொடங்கும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த குழு இன்று (புதன்கிழமை) திருச்சி வந்தடைகிறது. அதைத்தொடர்ந்து, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் ஆய்வுசெய்ய இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை