கடைசி மூச்சு வரை இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன் - முகமது ஷமி
கொல்கத்தா,இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.அதன்படி இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள முகமது ஷமி இடம் பிடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விளையாடினார். அதன்பின்னர் காயம் காரணமாக எந்தவித கிரிக்கெட்டும் விளையாடாமல் இருந்து வந்தார்.இந்நிலையில், தனது கடைசி மூச்சு வரை இந்தியாவுக்காக விளையாட விரும்புவதாக முகமது ஷமி கூறியுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற பசி எப்போதும் நிற்கக்கூடாது என்று நான் கருதுகிறேன். அந்த பசி உங்களிடம் இருக்கும் வரை எவ்வளவு முறை காயங்கள் சந்தித்தாலும் உங்களால் மீண்டும் போராடி வர முடியும்.எவ்வளவு போட்டிகள் விளையாடினாலும் அது எனக்கு குறைவானதாகவே தோன்றுகிறது. ஏனெனில் ஒருமுறை கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்று விட்டால் எனக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது. எனவே என்னுடைய கடைசி மூச்சு வரை இந்தியாவுக்காக விளையாட நான் விரும்புகிறேன். நாட்டுக்காகவும் மாநிலத்துக்காகவும் விளையாடிய வீரர்கள் காயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை.அதனால் காயத்தை சந்திக்கும் போதெல்லாம் எப்போது மீண்டும் விளையாடுவோம் என்ற எண்ணம் தான் எனக்கு இருக்கும். உங்களிடம் கடினமான உழைப்பு மற்றும் கமிட்மென்ட் இருந்தால் எந்த காயமும் உங்களை நீண்ட காலம் அணியிலிருந்து வெளியே வைக்க முடியாது. நீங்கள் மீண்டும் வருவதற்கான வழியை எப்படியாவது கண்டறிவீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.