கர்நாடகா சாலை விபத்தில் 4 பேர் பலி
பெங்களூரு,கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மந்திராலய சமஸ்கிருத பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு நரஹரி கோவிலில் பிரார்த்தனை செய்வதற்காக ஹம்பிக்கு ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வாகானம் சிந்தனூரில் உள்ள அரகினாமாரா முகாம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இந்த கோர விபத்தில் 3 மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாணவர்கள் ஆர்யவந்தன் (18), சுசீந்திரா (22) மற்றும் அபிலாஷ் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் டிரைவர் சிவா (24) என்பவரும் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கர்நாடகாவின் உத்தர கன்னடம் மாவட்டத்தில் இன்று அதிகாலை காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு வேறு விபத்துகளுக்கு அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.