மராட்டியத்தில் ரெயில் விபத்து - ராகுல் காந்தி இரங்கல்
புதுடெல்லி,உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில், மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பட்னேரா ரெயில் நிலையம் அருகே ரெயில் இன்று மாலை வந்தபோது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. உடனடியாக அங்கிருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கிடையே ரெயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், அந்த ரெயிலில் இருந்து மற்ற பயணிகள் அவசர அவசரமாக இறங்கியுள்ளனர். அவர்கள் அருகே இருந்த தண்டவாளத்தில் உடைமைகளுடன் நின்றிருந்த நிலையில், எதிர்திசையில் அதிவேகமாக வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்தவர்கள் மீது மோதியது. நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த விபத்தில் சிக்கி 13 பயணிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மராட்டியத்தின் ஜல்கானில் நடந்த பயங்கர ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தத்தையும், துயரத்தையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை அரசும் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். தீ விபத்து பற்றிய வதந்தி எவ்வாறு பரவியது, இவ்வளவு பயங்கரமான விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.