தெரு நாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்

  தினத்தந்தி
தெரு நாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்

மதுரா,உத்தரபிரதேச மாநிலம் மதுராவின் கோசி கலான் பகுதியில் நேற்று மதியம் 3 மணியளவில் சோபியான் என்ற 3 வயது சிறுவன் தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, திடீரென அங்கு வந்த 6 தெரு நாய்கள் அந்த சிறுவனை சூழ்ந்து கடித்து குதறி இழுத்து சென்றுள்ளன. இதனை, நேரில் கண்ட அங்கிருந்த மற்ற சிறுவர்கள் ஓடிச்சென்று சோபியானின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு வந்த குடும்பத்தினர் குச்சிகளால் அந்த நாய்களை விரட்டியுள்ளனர். ஆனால், அதற்குள் அந்த நாய்கள் தாக்கியதில் சோபியானின் உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.பின்னர், உடனடியாக அந்த சிறுவனை அவனது குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, சோபியானின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களின் வீரியம் அதிகமாக இருந்ததினால் அந்த மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், போகும் வழியிலேயே சோபியான் பரிதாபமாக பலியானான். இந்த சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அப்பகுதி மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மூன்று சகோதரர்களில் இளையவரான சோபியானின் மரணம் அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. 3 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை