ரஞ்சி கோப்பை: மும்பை அணியிலிருந்து ரோகித், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் நீக்கம்.. காரணம் என்ன..?
மும்பை, 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதன் கடைசி கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் நாளை (30-ம் தேதி) தொடங்க உள்ளன. இதில் நடப்பு சாம்பியன் ஆன மும்பை அணி (ஏ பிரிவு) தனது கடைசி லீக் ஆட்டத்தில் மேகாலயாவுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்துடன் மும்பை அணி களம் இறங்குகிறது. கடந்த லீக் ஆட்டத்தில் 42 முறை சாம்பியனான மும்பை அணி ஜம்மு-காஷ்மீரிடம் தோற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய முன்னணி வீரர்களும் உள்ளூர் தொடர்களில் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற பி.சி.சி.ஐ.-யின் அறிவுத்தலின் படி களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா (3, 28 ரன்), ஜெய்ஸ்வால் (4, 26), ஸ்ரேயாஸ் அய்யர் (11, 17) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இந்த நிலையில் கடைசி லீக் ஆட்டத்துக்கான 16 பேர் கொண்ட மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.