துபே - ஹர்ஷித் ராணா மாற்று வீரர் விவகாரம்: இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி

  தினத்தந்தி
துபே  ஹர்ஷித் ராணா மாற்று வீரர் விவகாரம்: இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி

புனே, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. முன்னதாக புனேயில் நடைபெற்ற இந்த தொடரின் 4-வது டி20 போட்டியில் இந்திய வீரர் ஷிவம் துபே பேட்டிங் செய்கையில் கடைசி ஓவரில் ஜாமி ஓவர்டான் வீசிய பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.ராணா மாற்று வீரராக இறங்கியதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அந்த அணியின் முன்னாள் வீரர்களான குக், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் போன்றவர்களும் இந்த முடிவை விமர்சித்தனர்.இந்நிலையில் ஒருவேளை 4வது போட்டியில் தோற்றால் கூட கடைசிப் போட்டியில் வென்று தொடரை வெல்லும் திறமை இந்தியாவிடம் இருப்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே மாற்று வீரர் விதிமுறையை சரியாகப் பயன்படுத்தாமல் இந்தியாவின் பெயரைக் கெடுக்காதீர்கள் என்று அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "புனேயில் நடைபெற்ற போட்டியில் தலையில் அடிபட்ட பின்பும் துபே கடைசி வரை விளையாடினார். எனவே அவரை மாற்று வீரர் விதிமுறைக்கு உட்படுத்துவதற்கு சரியானவர் அல்ல. அதையும் தாண்டி மாற்று வீரர் விதிமுறையை அனுமதித்தது சரியான முடிவல்ல. ஆம் ஒருவேளை பேட்டிங் செய்யும்போது அவர் தனது தசையில் அடி வாங்கியிருந்தால் மாற்று வீரர்களை பயன்படுத்தலாம். அதுவும் பீல்டிங் செய்வதற்கு மட்டுமே இருக்க வேண்டும் பவுலிங் செய்யக்கூடாது.மாற்று வீரருக்கு சரியான மாற்று வீரர் என்ற வகையில் பார்க்கும் போது துபே - ராணாவுக்கு இடையே எந்த ஒற்றுமையும் இல்லை. எனவே அதை விமர்சிப்பதற்கான அனைத்து காரணங்களும் இங்கிலாந்து அணிக்கு இருந்தது. இந்த இந்திய அணி மிகவும் சூப்பரான அணியாகும். இது போன்ற செயல்களால் நம்முடைய வெற்றியை களங்கமடைய வைக்கத் தேவையில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே தடுமாறிய நாம் பாண்ட்யா, துபே ஆகியோரால் 181 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடும் அளவுக்கு வந்தோம். ஒருவேளை ராணா 3 விக்கெட்டுகள் எடுக்காமல் இருந்தால் கூட மும்பையில் நம்மால் சிறந்த அணி என்று காண்பிக்க முடியும்" என கூறினார்.

மூலக்கதை