நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் அமெரிக்க விமானத்தில் சொந்த நாட்டுக்கு வருகை
நியூயார்க், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி இதற்காக நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.அமெரிக்காவின் எல்லை வழியே சட்டவிரோத வகையில் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.இதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேரை சுமந்து கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று சொந்த நாட்டுக்கு புறப்பட்டது.அவர்களுடைய விமானம், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இன்று மதியம் 1.55 மணியளவில் தரையிறங்கியது. இதில், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், மராட்டியம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தலா 3 பேர் மற்றும் சண்டிகாரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.எனினும், நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. அமெரிக்க அரசால், சட்டவிரோத இந்திய குடியேறிகள் அடங்கிய முதல் குழுவினர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்கள் அடுத்த விமானத்தில் சொந்த நாட்டுக்கு வந்தடைவார்கள்.இதற்கு முன்பு, 205 சட்டவிரோத குடியேறிகளுடன் அமெரிக்காவின் சி-17 என்ற ராணுவ விமானம் புறப்பட்டு செல்கிறது என தகவல் வெளியாகி இருந்தது. அமெரிக்காவுக்கு, பலர் லட்சக்கணக்கான பணம் செலவழித்து, சட்டவிரோத வழியை (டான்கி ரூட்) தேர்ந்தெடுத்து செல்கின்றனர்.ஆபத்து நிறைந்த இந்த பயணத்தில், இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானாவை சேர்ந்த இளைஞர்கள் பலர் நீர் நிலைகள், காடுகளை கடந்து அதிகாரிகளிடம் சிக்காமல் அமெரிக்காவை சென்று சேர்கின்றனர். இதில் இலக்கை அடைவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.இந்த கடினம் வாய்ந்த சூழலில் அமெரிக்காவை சென்றடைந்தவர்களின் நிலை தற்போது சிக்கலில் உள்ளது. அமெரிக்காவில் புதிதாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப்பின் அரசால், அவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.