ஜனநாயகம் மேற்கத்திய பண்புநலனே என கூறும் நாடுகளுக்கு... மத்திய மந்திரி ஜெய்சங்கர் துணிச்சலாக பேச்சு

  தினத்தந்தி
ஜனநாயகம் மேற்கத்திய பண்புநலனே என கூறும் நாடுகளுக்கு... மத்திய மந்திரி ஜெய்சங்கர் துணிச்சலாக பேச்சு

முனிச்,ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த 14-ந்தேதி பாதுகாப்பு மாநாடு தொடங்கியது. இதில், ஆசிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான சவால்கள் பற்றி பேசப்பட்டு வருகின்றன.இதில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதேபோன்று, நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர், அமெரிக்க செனட் உறுப்பினர் எலிஸ்ஸா ஸ்லாட்கின், வார்சா மேயர் ரபால் ஜாஸ்கோவ்ஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், ஜனநாயக மீள்தன்மையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் பேசிய, மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், ஜனநாயகம் ஒரு மேற்கத்திய பண்புநலன் என கூறும் மேற்கத்திய நாடுகளை சாடும் வகையில் சில விசயங்களை முன்வைத்து பேசினார்.இந்த நாடுகள் தங்களுடைய சொந்த வீட்டில் கற்பிக்கும் விசயங்களை வெளிநாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டார். ஒரு காலத்தில்... என பேச தொடங்கிய அவர், அனைத்து வகையிலும் நேர்மையாக நான் இதனை கூறியாக வேண்டும். ஜனநாயகம் ஒரு மேற்கத்திய பண்புநலன் என கூறிக்கொண்டு செயல்பட்டு வந்த மேற்கத்திய நாடுகள், மறுபுறம் உலகளாவிய தெற்கு பகுதியில் ஜனநாயகமற்ற சக்திகளை ஊக்குவிப்பதில் முனைப்புடன் செயல்பட்டது.அது இன்னும் நடக்கிறது. நீங்கள் உங்கள் சொந்த நாட்டில் மதிக்க கூடிய விசயங்கள் எல்லாவற்றையும், வெளிநாட்டில் கடைப்பிடிப்பதில்லை என்றார்.ஜனநாயகம் வெளிப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், மேற்கத்திய நாடுகளுக்கு வெளியேயும் ஜனநாயக மாதிரிகளை தழுவ வேண்டியது மிக முக்கியம். அதன்பின்னர் பிற நாடுகளின் வெற்றிகள், குறைபாடுகள் மற்றும் பொறுப்பு தன்மையை உலகளாவிய தெற்கு நாடுகளும் காணும் என்றார்.தொடர்ந்து அவர், நாங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து சவால்களும், அதுவும் குறைந்த வருவாய் ஈட்டும்போதும், ஜனநாயக மாதிரிக்கு உண்மையாக நாங்கள் இருக்கிறோம். ஏறக்குறைய எங்களுடைய உலகை நீங்கள் பார்க்கும்போதே அது தெரியும். அதனை செய்து வரும் மிக அழகான ஒரே நாடாக நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் இந்தியா பெருமை கொள்ளும் வகையில் கூறியுள்ளார்.என்னுடைய மனதில் உள்ள விசயங்களை இந்த மன்றத்தில் நான் பேசுகிறேன் என்றும் அவர் எக்ஸ் வலைதள பதிவில் பகிர்ந்து உள்ளார். இதேபோன்று, அமெரிக்க செனட் உறுப்பினரான ஸ்லாட்கின் பேசும்போது, ஜனநாயகம் உங்களுடைய மேஜை மீது உணவை கொண்டு வந்து வைக்காது என கூறினார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மந்திரி ஜெய்சங்கர், செனட் உறுப்பினர் அவர்களே, உங்கள் மேஜை மீது வந்து, ஜனநாயகம் உணவை வைக்காது என நீங்கள் கூறுகிறீர்கள். உண்மையில், உலகின் என்னுடைய பகுதியில் ஜனநாயகம் அதனை செய்கிறது. நாங்கள் ஜனநாயக சமூகத்தில் இன்று இருக்கிறோம். நாங்கள் 80 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் உணவை அளித்து வருகிறோம் என கூறினார்.அதனால், மக்கள் எவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். அவர்களின் வயிறு எவ்வளவு நிரம்பியிருக்கிறது என்பதே முக்கிய விசயம். உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான உரையாடல்கள் இருக்கும். எனவே, நீங்கள் கூறும் ஒன்றே உலகளாவிய நடைமுறையாக இருக்கும் என நீங்களாக நினைத்து கொள்ளாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை