சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவை மட்டும் வீழ்த்தி என்ன பயன்? பாக்.வீரர்

  தினத்தந்தி
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவை மட்டும் வீழ்த்தி என்ன பயன்? பாக்.வீரர்

லாகூர்,இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவை எப்படியாவது பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும் என்பதே அந்நாட்டு ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.இந்நிலையில் இந்தியாவை மட்டும் வீழ்த்தி என்ன பயன்? என பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தியாவிடம் தோற்று கோப்பையை தக்க வைத்தால் அதை விட பெரிய சாதனை இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.இது குறித்து அவர் பேசியது பினவருமாறு:- "சாம்பியன்ஸ் டிராபிக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துவது மிகவும் ஸ்பெஷல். லாகூரில் இருந்து வரும் எனக்கு கோப்பையை எனது சொந்த மண்ணில் வெல்வது கனவு நிஜமான தருணமாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் கோப்பையை வெல்வதற்கான திறன் இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் சூழ்நிலைகள் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் சொல்வது போல அது உலகின் மிகப்பெரிய போட்டி. ஆனால் அது ஒரு போட்டி மட்டுமே. சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே அந்த ஒரு போட்டியை வெல்வதை விட முக்கியமானதாகும். ஒருவேளை அந்தப் போட்டியை வென்று சாம்பியன்ஸ் டிராபியில் தோற்றால் அது நன்றாக இருக்காது. இந்தியாவிடம் தோற்றாலும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றால் அதுவே பெரிய விஷயமாகும். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் நாங்கள் வெல்ல முயற்சிப்போம். அவர்களுக்கு எதிராக எனது சிறந்த செயல்பாடுகளைக் கொடுப்பேன்" என கூறினார்.

மூலக்கதை