கொசு என விமர்சித்த ஜெயக்குமார்... அவர் ஒரு சிரிப்பு அரசியல்வாதி - ஓபிஎஸ் பதிலடி

  தினத்தந்தி
கொசு என விமர்சித்த ஜெயக்குமார்... அவர் ஒரு சிரிப்பு அரசியல்வாதி  ஓபிஎஸ் பதிலடி

கோவை,முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஈபிஸ் மற்றும் ஓபிஸ் ஆகியோர் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். அதன் பின்னர், நடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். தற்போது ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை நடத்தி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.இதற்கிடையில், ஓபிஎஸ் தலைமையில் நேற்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் பதவி இருக்காது, ஒருங்கிணைப்பாளர் பதவியை தான் கொண்டு வருவேன் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், ஒரு காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அதிமுகவை, இன்று இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார். அதிமுக வெற்றி பெறக்கூடிய ரகசியம் என்னிடம் இருக்கிறது என்று கூறினார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், ஓபிஎஸ் கூறியதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள். தேசியக் கல்வி கொள்கை மாதிரி நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் கேட்காமல் இதை கேட்கிறீர்கள். கொசுக்கள் பற்றி பேசுவதற்கு இதுவா நேரம்? அவர் தனக்கு ரகசியம் தெரியும் என்கிறார். ரகசியம் என்ற வார்த்தை வந்தாலே யாரோடு யார் தொடர்பு என்பது தெரியும். திமுகவோடு அவருக்கு தொடர்பு இருந்து அந்த நோய் தொற்றிவிட்டது. அதனால் தான், எனக்கு அந்த ரகசியம் தெரியும் என்கிறார் என்று கூறினார்.இந்தநிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-உதயகுமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை, இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், அவர் என்ன பேசினாலும் பேசிவிட்டு போகட்டும், அவர் பேசுகின்ற மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்குத் தெரியும், அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். கொங்குநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் கொங்கு நாட்டின் தங்கங்கள். நீண்ட காலம் கட்சிக்காக நானும் செங்கடேடையனும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க கூடியவர் உன்னதமானவர் செங்கோட்டையன். கட்சி இணைய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது. அதிமுக விசுவாசிகள் அனைவரும் இணைய வேண்டும் என நினைக்கின்றனர். அதிமுக ஒன்றினைய வேண்டும் என்பது எங்களது கருத்தாக உள்ளது என்றார்.அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உங்களை கொசு என்று கூறி விமர்சித்து இருக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "சிரிப்பு போலீஸ் மாதிரி ஜெயக்குமார் ஒரு சிரிப்பு அரசியல்வாதி என்று பதிலடி கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மூலக்கதை