கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து விற்பனை - அதிர்ச்சி தகவல்

  தினத்தந்தி
கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து விற்பனை  அதிர்ச்சி தகவல்

பிரயாக்ராஜ்,உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ந்தேதி நிறைவடைய உள்ளது. இதனிடையே மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 56 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் கும்பமேளாவில் பெண் பக்தர்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோ எடுத்து விற்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதாவது டெலிகிராம் சேனல் ஒன்று புனித நீராடும் பெண்களின் வீடியோக்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு இன்ஸ்டாகிராம் சமூகவலைதள பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய வகையில் பெண் பக்தர்களின் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.இது கும்பமேளாவில் புனித நீராட வரும் பெண் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மேற்படி இரண்டு சமூகவலைதள கணக்குகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்டாகிராமை கையாளும் நபர் குறித்து மெட்டாவிடம் தகவல் கோரி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகா கும்பமேளாவில் பெண்களின் கவுரவத்தை பாதுகாக்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது என்றும், இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விஷயம் என்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை