ரெயில் என்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்கத் தடை: ரெயில்வே உத்தரவுக்கு என்ன காரணம்..?

புதுடெல்லி, ரெயிலின் என்ஜின் டிரைவர்கள் இளநீர் உள்பட சில பொருட்களை பணியின்போது சாப்பிடக்கூடாது என்று தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு ரெயில் என்ஜின் டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.முன்னதாக இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கூறப்பட்டு இருப்பதாவது:-ரெயில் என்ஜின் டிரைவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா என்பதை கண்டறிய பணிக்கு முன்பு மூச்சு பரிசோதனை கருவி மூலம் நடத்தப்படும் பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியதுபோல் காட்டுவது அதிகரித்து வருகிறது. ஆனால், ரத்த பரிசோதனையில், அவர்கள் மது அருந்தவில்லை என்று தெரிய வருகிறது. அவர்கள் ஹோமியோ மருந்துகள், குளிர்பானம், இளநீர், சிலவகை வாழைப்பழங்கள், இருமல் மருந்து, வாய் கொப்பளிக்கும் திரவம் ஆகியவை பயன்படுத்துவதே சுவாச காற்றில் மதுகலப்புக்கு காரணம். இத்தகைய தவறான பரிசோதனை முடிவுகளால், அவர்களை பணிக்கு அனுப்புவதில் இடையூறு ஏற்படுகிறது.எனவே, என்ஜின் டிரைவர்கள் பணிக்கு முன்பு, இளநீர் உள்ளிட்ட மேற்கண்ட பொருட்களை சாப்பிடுவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் ஏதேனும் ஒருசில பொருட்களை பயன்படுத்த விரும்பினால், உயர் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மருந்துகளை ரெயில்வே மருத்துவ அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூலக்கதை
