ஒருநாள் கிரிக்கெட்: குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள்.. முகமது ஷமி உலக சாதனை

துபாய், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிரிடாய் 100 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த ஆட்டத்தில் வீழ்த்திய 5 விக்கெட்டுகளையும் சேர்த்து ஒருநாள் போட்டியில் இதுவரை 202 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் 200 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு அவருக்கு 5,126 பந்துகள் தேவைப்பட்டன. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் மிட்செல் ஸ்டார்க் 5,240 பந்துகளில் 200 விக்கெட் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள ஷமி புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:- 1. ஷமி - 5126 பந்துகள் 2. ஸ்டார்க் - 5240 பந்துகள் 3. சக்லைன் முஷ்டாக் - 5451 பந்துகள் 4..பிரெட் லீ - 5640 பந்துகள் 5..டிரெண்ட் போல்ட் - 5783 பந்துகள்.
மூலக்கதை
