சாம்பியன்ஸ் டிராபி: வங்காளதேசத்தை வீழ்த்தியப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?

  தினத்தந்தி
சாம்பியன்ஸ் டிராபி: வங்காளதேசத்தை வீழ்த்தியப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.இதில் துபாயில் நேற்று நடந்த 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ஹிரிடாயின் அபார சதத்தின் உதவியுடன் கவுரமான நிலையை எட்டியது. 49.4 ஓவர்கள் விளையாடிய வங்காளதேச அணி 228 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிரிடாய் 100 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.இந்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியப்பின் இந்திய அணியின் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், "நீங்கள் விளையாடுவதற்கான தன்னம்பிக்கையை முதலில் பெற வேண்டும். போட்டி நடைபெற நடைபெற வெவ்வேறு உணர்வுகள் வரும். இருப்பினும் எங்களுடைய அணியில் நிறைய அனுபவம் இருக்கிறது. கில், ராகுல் நன்றாக விளையாடினார்கள். துபாய் பிட்ச் பற்றி வெறும் ஒரு போட்டிக்கும் பின் சொல்ல முடியாது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நீங்கள் விளையாடி என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும். அந்த வகையில் அணியாக நாங்கள் சூழ்நிலைகளை படித்தோம். சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடரில் நீங்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவீர்கள். நீண்ட நாட்கள் கழித்து ஷமி இப்படி விளையாடுவதற்காக நாங்கள் காத்திருந்தோம். எங்களுக்காக அவரால் என்ன கொண்டு வர முடியும் என்பது தெரியும். தேவைப்படும் நேரத்தில் உயர்ந்து நிற்கக்கூடிய அவரைப் போன்ற வீரர் எங்களுக்கு தேவை. கில் எப்படிப்பட்டவர் என்பது தெரியும் என்பதால் அவருடைய ஆட்டத்தை பார்த்து யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கடைசி வரை அவர் பேட்டிங் செய்ததை பார்த்தது நன்றாக இருந்தது. அக்சர் படேலை நாளை டின்னருக்கு நான் அழைத்துச் செல்லலாம். ஏனெனில் அது போன்ற கேட்ச்கள் எளிதானது என்பதால் என்னுடைய தரத்திற்கு நான் அதைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் விளையாட்டில் இது போன்றது நடக்கும். ஜாகிர் - ஹிரிடாய் அமைத்த பார்ட்னர்ஷிப்புக்கு பாராட்டுக்களை கொடுக்க வேண்டும். பிட்ச் அடுத்த போட்டிகளில் எப்படி இருக்கும் என்று சொல்வதற்கு நான் மைதான பராமரிப்பாளர் கிடையாது. ஆனால் இங்கு விளையாடப்பட்ட போட்டிகளில் பிட்ச் இதே போல இருக்கலாம் என்று தெரிகிறது" என கூறினார்.

மூலக்கதை